நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரத்தை மாநில அரசு பெற கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றி தமிழக மாணவர்களின் உயிரைக் காக்க வேண்டுமென தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று நடைபெறும் நீட் தேர்வால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி மாணவர்கள் விக்னேஷ், ஜோதிஸ்ரீ துர்கா, ஆதித்தியா, மோதிலால் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இவர்களின் மரணம் தமிழகத்தில் நீட் தேர்வின் படுகொலை பட்டியலை நீளச் செய்திருக்கிறது.
மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களின் இறப்புக்கு வேதனை தெரிவித்துள்ளார்.
அரசின் மறைமுகமான அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் சக்தியற்றவர்களாக இளம் பருவத்தினரை ஆக்கும் வகையில் கல்வித் திட்டங்களும், சமூக மதிப்பீடுகளும் அமைந்திருக்கிற நிலையில் தமிழக முதலமைச்சரின் இந்த சொற்கள் வலிமையற்றதாகவே உள்ளது.

“நீட் தேர்வை ரத்து செய்வதே அரசின் கொள்கை” என மாநில அரசு அறிக்கை விடுவதன் மூலம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பொய்யான நம்பிக்கையை வித்திட்டு வருகிறது.
ஏனெனில் கல்வி பொதுப் பட்டியலில் (concurrent list) உள்ள நிலையில் மாநில அரசுக்கு கல்வியில் ஒரு மாற்றமும் கொண்டு வரும் அதிகாரம் கிடையாது என்பதே உண்மை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு (state list) மாற்றினால் மட்டுமே மாநில அரசு உரிய மாற்றத்தை செயல்படுத்தும் அதிகாரத்தை பெற்று தமிழக மாணவர்களின் நலனை காக்க முடியும்.
நீட் விவகாரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் அனிதாவில் தொடங்கி இதுவரை 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். மாநில அரசு மாற்று வழியினைச் சிந்தித்து துரிதமாக செயல்பட வேண்டும்.

பேரிடர் தொற்று காலத்தில் பல மாநில அரசுகளும், சர்வதேசளவிலும் நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், தேசியத் தேர்வு முகமை தனது நிலைபாட்டில் உறுதியாக இருந்தது யாருக்காக?
நீதிமன்றங்கள் கைவிட்ட நிலையில், மாணவர்களின் கழுத்தை நெறிக்கும் திட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் செயல்பட முடியும். மேலும் வலிமையான எதிர்ப்புகளை தெரிவிக்காத வரை இப்படுகொலைகள் தொடரும் என்பதால் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூகத்தில் ஏற்கனவே சாதிரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை மேலும் உறுதிப்படுத்தி நீடிக்கச் செய்யும் நீட் தேர்வு முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டு விரைந்து செயலில் இறங்க வேண்டும் என மாநில அரசை தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.




