அசோக் கோலட் அரசுக்கு ஆதரவாக 109 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் அளித்துள்ளதாக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது. தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் அறிவித்தார். மேலும் அசோக் கெலாட் அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறி உள்ளார். ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டமன்ற இடங்கள் உள்ளது.
107 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், 13 சுயேட்சைகளும், ராஷ்டிரிய லோக் தல்லை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வும் அசோக் கோலட் ஆட்சியில் இடம்பெற்றிருந்தனர். ஆனால், சச்சின் பைலட் தன்னிடம் 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என கூறியதால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜ்வாலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெரும்பான்மையான 109 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையில் ராஜஸ்தானில் அசோக் கோலட்டின் ஆட்சி உள்ளது. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் ஆதரவை கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இவர்கள் பாஜகவின் முயற்சியை தோற்கடித்துவிட்டனர்.
அரசியில் விவகாரங்கள் குறித்து நாளை காலை 10 மணிக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் மற்றுமொரு கூட்டம் நடைபெற உள்ளது. சச்சின் பைலட் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். நாங்கள் அவர்களுக்கு எழுத்து மூலாமகவும் எழுதி தருகிறோம். நிலைமை குறித்து விவாதம் நடத்த சச்சின் பைலட் வர வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
ராஜஸ்தானை வலுப்படுத்தவும், 8 கோடி மக்களுக்கு இணைந்து பணியாற்றவும் அவர்கள் வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். யாருக்கேனும் யார் மீதாவது ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை அவர்கள் திறந்த மனதுடன் தெரிவிக்க வேண்டும். அனைவரது பிரச்சனைகளையும் கேட்கவும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தயாராக உள்ளனர் என அவர் தெரிவித்தார்.