இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பவர் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி. ஆசிய நாடுகளின் பட்டியலிலும் இவருக்கே முதலிடம். இந்த ஆண்டும் அவரே அந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். ஆனால், அடுத்த ஆண்டு இந்த நிலைமை மாறுமோ என நினைக்க வைக்கிறது புதிய புள்ளிவிவர பட்டியல்.
`ஹூருன் இந்தியா’ (Hurun India) நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த பட்டியல் தான் பகீர் கிளப்பியிருக்கிறது. ஹூருன் இந்தியாவின் 2021-ம் ஆண்டுக்கான டாப் 10 பணக்காரர்களையும், அவர்களது சொத்து விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் இவர்கள் தாம்;
- முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் குழுமம்) – ரூ. 7,18,000 கோடி
- கௌதம் அதானி (அதானி குழுமம்) – ரூ. 5,05,900 கோடி
- ஷிவ் நாடார் (ஹெச்.சி.எல்) – ரூ. 2,36,000 கோடி
- எஸ்.பி.ஹிந்துஜா (ஹிந்துஜா குழுமம்) – ரூ. 2,20,000 கோடி
- லட்சுமி மிட்டல் (மிட்டல் குழுமம்) – ரூ. 1,74,400 கோடி
- சைரஸ் பூனாவாலா (சீரம் இன்ஸ்டிட்யூட்) – ரூ. 1,63,700 கோடி
- ராதாகிஷன் தமானி (அவன்யூ சூப்பர்மார்ட்ஸ்) – ரூ. 1,54,300 கோடி
- வினோத் ஷாந்திலால் அதானி (அதானி குழுமம்) – ரூ.1,31,600 கோடி
- குமார் மங்கலம் பிர்லா (ஆதித்யா பிர்லா) – ரூ.1,22,200 கோடி
- ஜெய் செளத்ரி (Zscaler)- ரூ.1,21,600 கோடி
தொடர்ந்து இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில், முகேஷ் அம்பானியே ஆதிக்கம் செலுத்திவருகிறார். நாட்டின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 9 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. முகேஷ் அம்பானியின் தினசரி வருமானம் ரூ. 163 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்திலிருக்கும் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 261 சதவிகிதம் அதிகரித்து பகீர் கிளப்பியிருக்கிறது. கௌதம் அதானி, நாளொன்றுக்கு ரூ.1000 கோடி வருமானம் ஈட்டுவதாக ஹூருன் இந்தியா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், ஹெச்.சி.எல் குழுமத் தலைவருமான ஷிவ் நாடார் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். நாளொன்றுக்கு 260 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டைவிட 67 சதவிகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“கடந்த ஆண்டு அதானியின் சொத்து மதிப்பு ரூ.1,40,200 கோடி. இந்த ஆண்டு அது 261 சதவிகிதம் அதிகரித்து, 5,05,900 கோடி ரூபாயாக மாறியிருக்கிறது. அம்பானியின் சொத்து மதிப்பு 7,18,000 கோடி ரூபாயாக இருக்கிறது. இருவரின் சொத்து மதிப்புக்குமான இடைவெளி 2,12,000 கோடி ரூபாயாகத்தான் இருக்கிறது. தினசரி, கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டுகிறது அதானி குழுமம். இதே வேகத்தில் சென்றால், ஒரே ஆண்டில் அம்பானியை, அதானி முந்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.