தமிழகத்தில் இருந்து மும்பைக்கு கொண்டுச் செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள எம்.ஐ. செல்போன் தொழிற்சாலையில் இருந்து, மும்பைக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி புறப்பட்டது. இந்த லாரியை உத்தரபிரதேசத்தை சேர்ந்த இர்பான் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
கன்டெய்னர் லாரி ஆந்திர மாநிலம் நகரி அருகே சென்றபோது, மற்றொரு லாரியில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி முகவரி கேட்பது போன்று பேசியுள்ளனர்.
அப்போது திடீரென கண்டெய்னர் லாரியில் ஏறிய அந்த கும்பல், ஓட்டுனரை துப்பாக்கி முனையில் மிரட்டி, சரமாரியாக அடித்து கைகளை கட்டி, வாயில் துணியை அடைத்து கீழே தள்ளிவிட்டு கண்டெய்னர் லாரியை கடத்திச் சென்றுள்ளனர்.

ஒருவழியாக அங்கிருந்து தப்பித்த லாரியின் ஓட்டுனர் இர்பான் நகரி போலீசில் புகார் அளித்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரியை கண்டுபிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அதிலிருந்த செல்போன்கள் அனைத்தையும் அந்த மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொள்ளை குறித்து, நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




