வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தும் போராட்டம் 51வது நாளாக நீடிக்கிறது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 51வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில், வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி சார்பில், டெல்லி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தின் போது, காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை அகற்றி முன்னேற காங்கிரசார் முனைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதேேபால் சட்டீஸ்கரில் ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினரை, தண்ணீரைப் பீய்ச்சியடித்து காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
இதனிடையே, வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற 9வது கட்டப் பேச்சுவார்த்தையில் விவசாயிகள் பங்கேற்றனர். இதில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் அரசின் தரப்பில் கலந்து கொண்டனர். 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் வரும் 19 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு 10-வது கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.