காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டால் காஷ்மீர் அபரிமிதமான வளர்ச்சியடையும் என பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இன்றைய காஷ்மீரின் நிலை என்னவாக இருக்கிறது…

அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 ஐ விலக்கிக்கொண்டதன் மூலம் ஒரு நீண்ட வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டிருக்கிறது என கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி மத்திய பாஜக அரசு கூறியது. காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அம்மாநில வளர்ச்சிக்கு பெரிய தடை …எனவே அது நீக்கப்படவேண்டும் என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்பட்டன. இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது சில நிபந்தனைகளுடன் இந்திய யூனியனோடு இணைய காஷ்மீர் ஒத்துக்கொண்டது. அதன்படி அந்த மாநிலத்திற்கென சில சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வந்து தற்போது காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அரசியல், நிர்வாக மாற்றத்திற்கு பெரிய அளவிள் எதிர்ப்பு கிளம்பும் என மத்திய அரசு எதிர்பார்த்ததால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி அரசியல் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் சாமானியர்கள் என பலரும் கைது செய்யப்பட்டார்கள்.
ஜம்மு-காஷ்மீர் மனித உரிமை அமைப்பின் அறிக்கையின் படி சில சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 6,600 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் 444 அரசியல் தலைவர்கள் ஜம்மு-காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்தால் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம். ஆனால் அதில் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மற்றும் அவர் மகன் உமர் அப்துல்லா உள்ளிட்டதலைவர்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர்.
ஆனால் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைர் மெகபூபா ஓராண்டாகியும் இன்னும் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளார்.
மேலோங்கிய தீவிரவாதம்
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால் காஷ்மீரின் பாதுகாப்பு பலப்படும் என பாஜக முன்வைத்த வாதங்களுக்கு நேர்மறையான மாற்றங்கள் தான் இப்போது அங்கு ஏற்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்திய அளவிலான தீவிரவாதம் குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் ஒரு இணையதளத்தின் புள்ளி விபரங்களின் படி ஜம்மு- காஷ்மீரில் தற்போது ஊடுருவல்களும் தீவிரவாத தாக்குதல்களும் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக 2018 ஆம் ஆண்டு பதிவான ஊடுருவல் நடவடிக்கைகளின் எண்ணிக்கை 328. ஆனால் கடந்த ஒரு ஆண்டில் இந்த எண்ணிக்கை 3,168 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் தீவிரவாத தாக்குதல்களும் அங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு நிலவும் நிலயற்ற தன்மையால் தீவிரவாத்தின் பால் நாட்டம் கொள்ளும் சாமானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது உயிரிழக்கும் பொதுமக்களின் எண்ணிக்க 20 விழுக்காடு அதிகரித்துள்ளதே இதற்கு சான்று.
கல்வி வேலை வாய்ப்பு நிலைமை…
இந்தியாவின் அழகான அமைதி பள்ளத்தாக்கில் தற்போது இனம் புரியாத ஒரு மவுனம் சூழ்ந்துள்ளது. அந்த மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் ரீதியிலான மாற்றத்திற்குப் பிறகு மக்களின் இயல்பு நிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அமைதி நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தொலைதொடர்பு சேவைகள் முடக்கப்பட்டன. இதனால் தொலைபேசி, செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடங்கின.
இது அந்த மாநிலத்தில் கடுமையான பொருளாதர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநில தொழில் வர்த்தக சபையின் மதிப்பீட்டின் படி இந்த ஓராண்டில் சுமார் 49 ஆயிரம் கோடி அளவிற்கு தொழில் துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் 4 லட்சத்து 97 ஆயிரம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
இதே போல் மாணவர்களின் கல்வியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட கல்வி நிறுவனக்களை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அச்சம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் வருகை மிக மிக குறைந்துள்ளது. ஏற்கனவே காஷ்மீரில் உள்ள அரசியல் முடக்கத்தோடு தற்போது கொரோனா முடக்கமும் சேர்ந்துள்ளது.
வளர்ச்சியயை நோக்கிய மாற்றங்கள் நிகழும் என்ற முழக்கத்தோடு அமல்படுத்தப்பட்ட சட்டத்திருத்தம் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பதில் பின்னடைவை தந்திருக்கிறதா என காஷ்மீரின் எதிர்காலம் குறித்த உண்மையான கவலை உள்ளவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். காஷ்மீர் …காஷ்மீர் ….ஒண்டர்ஃபுள் காஷ்மீர் என பாடப்பட்ட அந்த மாநிலம் பிளண்டர்ஃபுள் காஷ்மீராக மாறாமல் இருந்தால் சரி…
சுரா-