வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் தனது கேல் ரத்னா விருதை திருப்பி அளிக்கப்போவதாக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 11 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசு ஏற்கனவே 5 முறை விவசாய அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்று வரை அதற்கான தீர்வு எட்டப்படவில்லை.
மத்திய அரசு பாராளுமன்றத்தை கூட்டி 3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும்,வரும் டிசம்பர் 8 ம் தேதி நாடு முழுவதும் பாரத் பந்த் என்ற பெயரில் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாகவும் விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.இந்த வேலை நிறுத்தத்திற்கு இந்தியாவில் பல முன்னணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில்,இந்தியாவின் முன்னணி குத்துசண்டை வீரரான விஜேந்தர் சிங் ஹரியானா டெல்லி எல்லை பகுதியில் விவசாயிகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.அப்பொழுது விஜேந்தர் சிங் கூறியதாவது:வேளாண் மசோதா சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்,இந்த விவசாயிகளுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால்,எனக்கு கொடுக்கப்பட்ட நாட்டின் உயரிய விளையாட்டு விருதான, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன் என்று தெரிவித்தார்.