பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று கூட உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில், திருச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
நாட்டில் கல்வித்துறையில் சீர்திருதத்தம் மேற்கொள்வதாற்கான புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி போன்ற திட்டங்களுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக நடைபெற உள்ள கூட்டத்தில்,
புதிய கல்விக் கொள்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. மேலும், நாட்டில் மேற்கொள்ளபட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய அமைச்சரவை ஆய்வு செய்ய உள்ளது. இதைத்தொடர்ந்து, அரசின் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் மத்திய அமைச்சரவை அளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக திருச்சி உட்பட மேலும் 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் பரிந்துரைகள், மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆண்டுக்கு, 10 முதல் 15 லட்சம் பயணியர் வந்து செல்லும் விமான நிலையங்களின் பராமரிப்பை தனியார்மயமாக்குவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் முதற்கட்டமாக, மங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்க கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி, புவவேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர், ஆகிய விமான நிலையங்களையும், தனியார் மயமாக்க அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரைக்க உள்ளதாக, விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.