வங்கிக் கடனுக்கான வட்டிக்கு விதிக்கப்பட்ட வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிக்கு கடனுக்கான தவணையை செலுத்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை 6 மாத காலம் மத்திய அரசு அவகாசம் வழங்கியது. இருந்தாலும்சில வங்கிகள் கடனை கட்டாயம் செலுத்த வலியுறுத்தியதாக புகார்கள் எழுந்தன.
மேலும், வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு வட்டி வசூலிப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வங்கிகளின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
கடந்த 1ம் தேதி மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 2 ஆண்டுகள் வரை கடனை செலுத்த கால அவகாசம் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வங்கிக் கடனுக்கான வட்டிக்கு விதிக்கப்பட்ட வட்டியை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை எனவும், மாறாக தொகையை செலுத்துவதற்கான அழுத்தத்த்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என, மத்திய அரசு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா தெரிவித்தார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்திற்கான முதுகெலும்பாக வங்கித்துறை உள்ள நிலையில், பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.




