பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், அக்டோபர் 31ம் தேதி வரை இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட 6 ம் கட்ட ஊரடங்கு தளர்வு விதிமுறைகள் தொடரும் என்றும் அதேநேரத்தில் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு தடையில்லை என்றும் வேறு மாநிலங்கள் செல்ல இ-பாஸ் பெறத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது
கட்டுப்பாட்டுக்கு குறைவாக உள்ள பகுதிகளில் மாநில அரசு மத்திய அரசை கலந்தாலோசிக்காமல் எந்த வித கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. அவ்வாறு விதித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு மாநில அரசு பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் முழுமையாக மாநில அரசும் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.