காணமால்போன 76 குழந்தைகளை 3 மாதங்களுக்குள் கண்டுபிடித்த வீர செயலுக்காக, பெண் காவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் குழந்தைகள் கடத்தலை தொடர்பான வழக்குகள் தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து, அதனை கண்டுபிடிக்கும் வகையில் டெல்லி காவல்துறை ஊக்கத்திட்டம் ஒன்றை அறிவித்தது.
அத்திட்டத்தின் படி, காவலர் அல்லது தலைமை காவலர் ஒருவர் 12 மாதங்களுக்குள் காணாமல்போன 50 குழந்தைகளை கண்டுபிடித்தால் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க தொடங்கிய வடக்கு டெல்லியின் சமாய்பூர் பதலி காவல்நிலையத்தில் பணியாற்றும், பெண் தலைமை காவலர் சீமா தாக்கா மூன்றே மாதங்களில் காணாமல் போன 76 குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
இவர் மீட்ட குழந்தைகளில் 56 குழந்தைகள் 7 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி பஞ்சாப் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், இவர் கடத்தப்பட்ட குழந்தைகளை மிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவருக்கு டெல்லி மாநகர காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தா பதவி உயர்வை அறிவித்துள்ளார். அதன்படி, அவருக்கு உதவி துணை-காவல் ஆய்வாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையில், அவுட் ஆஃப் டர்ன் மூலம் பதவி உயர்வு பெற்ற முதல் காவலர் என்ற பெருமையை சீமா தாக்கா பெற்றுள்ளார்.

இந்த அனுபவம் குறித்து கூறும் சீமா காக்கா, நான் ஒரு தாய், எந்த தாயும் தங்கள் குழந்தையை இழக்க விரும்பமாட்டார்கள். காணாமல் போன குழந்தைகளை மீட்பதற்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் கடிகாரத்தை போல சுற்றி வேலை செய்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு கிராமத்திற்கு செல்ல வெள்ளத்தின்போதும் இரண்டு நதிகளை கடந்துள்ளோம். காணாமல் போயி மீட்கப்பட்ட சிறுவர்களில் சிலர் பெற்றோரிடம் சண்டை போட்டுவிட்டு பின்னர் தீவிர மது போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும், பெரும் சவால்களுக்கு மத்தியில் அவர்களை திருத்தி குடும்பத்துடன் ஒப்படைத்துள்ளோம் எனவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.




