எஸ்.பி.ஐ-ன் நிர்வாக இயக்குநர் தினேஷ் குமார் காரா, நேற்று எஸ்.பி.ஐ.-ன் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

எஸ்.பி.ஐ-ன் தலைவராக பதவி வகித்து வந்த ரஜ்னிஷ் குமாரின் பதவிக்காலம் அக்டோபர் 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது தினேஷ் குமார் காரா எஸ்.பி.ஐ.-ன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தினேஷ் குமார் காரா, கடந்த 1984-ம் ஆண்டு எஸ்.பி.ஐ-ல் பணிக்கு சேர்ந்தார். 35 ஆண்டுகள் வங்கித் துறையில் அனுபவம் பெற்ற காரா, எஸ்.பி.ஐ-ன் ஐந்து அசோசியேட் வங்கிகளையும், பாரதிய மகிளா வங்கியையும், எஸ்.பி.ஐ. உடன் 2017–ல் இணைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், காரா எஸ்.பி.ஐ. ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின், எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி வகித்துள்ளார். அப்போது, அந்நிறுவனத்தை நாட்டில் உள்ள 5-வது மிகப் பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக தரம் உயர்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுநோயால் வங்கித்துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதால், புதிய எஸ்.பி.ஐ. தலைவரான தினேஷ்குமார் காராவிற்கு ஒரு கடினமான பணி இருக்கும் எனவும், இது ஒரு சவாலான சூழ்நிலையாக இருக்கும் எனவும் அனைவராலும் கருதப்படுகிறது.




