‘போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுக’ – பிரதமருக்கு விவசாயிகள் கடிதம்
3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகளின் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.பாரத பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தங்களது 6 கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, அனைத்து விவசாயிகளுக்கும் விளைபயிர்களுக்கு சாகுபடி செலவுக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதை உறுதிசெய்ய சட்டம் இயற்ற வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், டெல்லி மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் காற்றுத்தர மேலாண்மைக்கான சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களை நீக்க வேண்டும் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவை தவிர, லக்கிம்பூரி கேரி போராட்டத்தின் போது விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்கவேண்டும் எனவும் அவரை கைது செய்யவேண்டும் என்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளது.