நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டாயம் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஃபாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான நீட்டிக்கப்பட்ட அவகாசம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் வாகனங்கள் சென்றால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட இரு மடங்கு செலுத்த வேண்டியிருக்கும் எனவும் சாலைப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்கும்போதே, ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில், தானியங்கி முறையில் சுங்கக்கட்டணம் தானாக கழித்துக்கொள்ளப்படும் என்பது ஃபாஸ்டேகின் சிறப்பம்சம். இதனால் சுங்கச்சாவடிகளில் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான ஃபாஸ்டேக் முறையை கடந்த 2016ம் ஆண்டே மத்திய அரசு கொண்டு அறிமுகப்படுத்தியது. பின்னர் இதை கட்டாயமாக்குவதற்கான அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.