ஆந்திர மாநிலத்தில் கொரோனா முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. படுகாயத்துடன் பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தனிமை முகாமில் தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதிலும் பல தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணத்துடன் சிகிச்சை அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் சார்பாக நட்சத்திர ஓட்டலில் வைத்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த முகாமில் 40 கொரோனா நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் என 10 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புகை மூட்டத்தின் காரணமாக அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே உயிரினை காப்பாற்றிக்கொள்ள பலர் மாடியிலிருந்து குதித்துள்ளனர். இதனால் தற்போது வரை 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் புகை மூட்டத்தினால் மயக்கமடைந்த பலரை பத்திரமாக மீட்டு வேறொரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா முகாமில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீவிபத்து காரணமாக ஏற்பட்ட புகையினால் மருத்துவர்கள், நோயாளிகள் பலர் மயக்கம் அடைந்துள்ளதோடு பலர் காயம்அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தெரியவருகிறது.




