அசாம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகோய், உடல்நல குறைவு காரணமாக இன்று மாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், 3 முறை அசாம் மாநிலத்தின் முதலமைச்சருமாய் பதவி வகித்தவர் தருண் கோகோய். இவருக்கு வயது 86.
தருண் கோகோய்க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று இருப்பது உறுதி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால், சில நாட்களிலேயே அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் மீண்டும் சிகிச்சைக்காக குவஹடியில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
கொரோனாவிற்கு பிறகு, அவருக்கு நுரையீரல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அவரின் உடல்நிலையில் சனிக்கிழமை பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவனை நிர்வாகம் தெரிவித்தது. எனவே, கடந்த 21-ம் தேதி முதல் தருண் கோகோய்க்கு உயிர் காக்கும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. எனவே வெளியூர் சென்றிருந்த முதல்வர் சர்பானந்தா சோனோவாலும், தனது பயணத்தை பாதியிலேயெ கைவிட்டு ஊர் திரும்பினார். இந்நிலையில், தருண் கோகோய் இன்று மாலை 5.34 மணியளவில் குவாஹாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அசாம் மாநில சுகாதார அமைச்சர் ஹிமாந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
மறைந்த தருண் கோகோய்க்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும், தொண்டர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.