தேர்தல் ஆணையராக இருந்து வந்த அசோக் லவாசா, பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் இன்று பொறுப்பேற்றுள்ளார்.
தேர்தல் ஆணையராக இருந்து வந்த அசோக் லவாசா, சமீபத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அசோக் லவாசா, தனது ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்தார். அசோக் லவாசாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொணட குடியரசுத் தலைவர், அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அசோக் லவாசாவின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளதால், அவருக்குப் பதிலாக ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் நிதித்துறை செயலாளருமான ராஜீவ் குமார், புதிய தேர்தல் ஆணையராக கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.
பொது நிறுவனங்கள் தேர்வு வாரிய தலைவராக அரசால் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்த ராஜீவ் குமார், இன்று இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இவர், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆகியோருடன் இணைந்து செயல்படவிருக்கிறார்.