வருகிற 7 ம் தேதி முதல் மதுரை வழியாக சிறப்பு ரயில் நாகர்கோவிலிருந்து மும்பை வரை தென்மாவட்ட வாசிகளின் வசதிக்காக இயக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து வருகிற 7 ம் தேதி முதல் மும்பைக்கு மதுரை வழியாக சிறப்பு ரயில் (வ.எண்.06340) புறப்படுகிறது. இந்த ரயிலானது திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு பகல் 11 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைந்து பின்பு மறுநாள் இரவு 7.15 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி. ரயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், மும்பையில் இருந்து வருகிற 8 ம் தேதி முதல் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் (வ.எண்.06339) இயக்கப்பட்டு செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமை நாட்களில் மும்பை சி.எஸ்.எம்.டி. ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.35 மணிக்கு புறப்படுகிறது.
வியாழன், வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமைகளில் அதிகாலை 4.10 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைந்து பின்பு காலை 10.20 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றடைகிறது.இந்த ரயில்களின் வழித்தடமானது வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், திருப்பத்தூர், காட்பாடி, சித்தூர், மதனப்பள்ளி ரோடு, கதிரி, தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல், அடோனி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், யாட்கிர், கல்புர்கி, சோலாப்பூர், குர்த்வாடி, டான்ட், புனே, கல்யாண், தானே, தாதர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும் நாகர்கோவிலிலிருந்து மும்பை செல்லும் ரயில் மட்டும் நாமக்கல் ரயில் நிலையத்திலும், மும்பையில் இருந்து வரும் ரயில் மகாராஷ்டிர மாநிலம் கர்ஜாட் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.