ஆந்திர மாநிலம் பந்தபள்ளியில் உள்ள பால் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஊழியர்கள், வாயு கசிவினால் மயக்கமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பந்தபள்ளியில் உள்ள பால் தொழிற்சாலையில், வேலை செய்து வந்த ஊழியர்கள் 14 பேர், நேற்று மாலை தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவினால், அடுத்தடுத்து மயங்கினர். இதனையடுத்து அங்கிருந்த சக ஊழியர்களும், தொழிற்சாலை நிர்வாகமும் சேர்ந்து, மயக்கமுற்ற ஊழியர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இதனையடுத்து, தொழிற்சாலைக்கு விரைந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தொழிற்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வாயு கசிந்துள்ளதாகவும், அதினால் ஊழியர்கள் மயக்கம் அடைந்ததாகவும் புட்டலபட்டு காவல்துறை துணை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயண் பாரத் குப்தா கூறுகையில், புட்டலபட்டு அருகே செயல்பட்டு வரும் ஹட்சன் பால் தொழிற்சாலையில், மாலை 5 மணியளவில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் அந்த ஷிப்டில் வேலை பார்த்த் 14 ஊழியர்களும் மயங்கி விழுந்துள்ளனர். ஊழியர்கள் சித்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அவர்கள் விரைவில் திருப்பதியில் உள்ள ருயா அல்லது எஸ்.வி.ஐ.எம்.எஸ் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். மற்ற ஊழியர்களின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து சித்தூர் மாவட்ட ஆட்சியரிடம், மாநில அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி தொலைபேசியில் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறும், சம்பவம குறித்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இம்மாநிலத்தில் தொடர்ந்து வாயுக்கசிவு ஏற்பட்டு ஊழியர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருவது, ஆந்திர மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




