மாட்டிறைச்சி கடத்தியதாக நினைத்து, அப்பாவி ஒருவரை கொடுமையாக தாக்கி அவரது மண்டையை பிளந்துள்ளது ஒரு கும்பல். இது தொடர்பான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மாட்டிறைச்சி தடை குறித்த அறிவிப்புக்கு பிறகு, பசு பாதுகாப்பு அமைப்பினரால் தாக்குதல்கள் நடப்பது தொடர்கதையாகி வருகின்றன.
இந்நிலையில், டெல்லி அருகே குர்கானில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. நேற்று குருகிராமில் மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அதில் மாட்டிறைச்சி கடத்தி செல்வதாக, அப்பகுதியை சேர்ந்த பசு பாதுகாவலர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அந்த வண்டியை, இருசக்கர வாகனத்தில் 8 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து சென்ற பசு காவலர்கள், வேனை துரத்தி பிடித்தது.
பிறகு வண்டியின் உள்ளே இருந்த ஓட்டுனர் லுக்மேனை வெளியே இழுத்தது. அவரை இரும்பு ராடு, சுத்தியல் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக அந்த கும்பல் தாக்கியுள்ளது. அந்த ஓட்டுநர் உதவி என கத்தியதால், கோபமடைந்த அந்த கும்பல், லுக்மேன் மீது தாக்குதலை தொடர்ந்தது. கீழே மண்ணில் விழுந்தவரை மொத்த கும்பலும் சேர்ந்து தாக்கியதில் அவரது மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. அதை பொருட்படுத்தாத அந்த கும்பல், லுக்மானை குர்கானின் பாட்ஷாபூர் கிராமத்திற்கு கடத்தி சென்று, அங்கு வைத்தும் தாக்கியது.
தகவல் அறிந்து வந்த பாேலீசார், பாதிக்கப்பட்டவரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அங்கிருந்த பொதுமக்களை கலைப்பதில் தான் அதிக கவனம் செலுத்தினர். தாக்குதலில் பலத்த காயமடைந்த லுக்மேனை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் லுக்மேனின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக பாட்ஷாப்பூர் ஸ்டேஷனில் எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
கடந்த 2015ல் நொய்டாவின் தாத்ரியில் மாட்டிறைச்சி கடத்தி சென்றதாக நினைத்து ஒருவரை கும்பல் அடித்து கொன்றது. அதே போல தான் லுக்மேன் மீதும் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.