சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு முயற்சியும் இந்தியாவை பிளவுப்படுத்தும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸின் 5வது தேசிய மாநாட்டில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டு பேசினார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சியை ஜனநாயகம் தடுப்பதாக சிலர் பேசுகின்றனர். சிலர் நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் கூடுதல் கட்டுப்பாடு மற்றும் சர்வாதிகார தலைமை தேவை என நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. நாட்டின் வளர்ச்சிக்கு இது ஒருபோதும் உதவாது. பொருள்கள் மற்றும் மூலதனத்தை வலியுறுத்தும் ஒரு தோல்வியடைந்த மாடலையே இவை அடிப்படையாக கொண்டுள்ளது. இது புதிய சிந்தனைக்கான மாடல் அல்ல. அதேபோல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி செயல்திறன் மிகவும் குறைவாக இருக்கிறது. சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்த ஒரு முயற்சியும் நாட்டை பிளவுப்படுத்தும். மக்களிடையே கசப்பை ஏற்படுத்தும்.
பெரும்பான்மை மற்றும் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. ஒரு நாடு வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறி சிறுபான்மையினரை தாக்க முயலும் போது அது எங்கும் நல்லதல்ல என்பதை தெற்கே (இலங்கையில்) பார்க்க வேண்டும். தாராளமயம் மதத்திற்கு எதிரானது அல்ல என்பதை நாம் வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.




