குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கர் ஆகஸ்டு 11ம் தேதி பதவியேற்கவுள்ளார்.
தற்போதைய குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடுவின் பதவிகாலம் ஆகஸ்டு 10ம் தேதியுடன் முடிவடைகிறது.இதையடுத்து புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜகவின் சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்கட்சிகளின் சார்பில் மார்க்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தல் முடிவுகள் நேற்று மாலையே அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் மொத்தம் பதிவான 725 வாக்குகளில் பாஜகவின் சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று(346 வாக்குகள் வித்தியாசத்தில்) வெற்றிபெற்றார். எதிர்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்றார். இதில் 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் நாட்டின் 14வது குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கர் வரும் ஆகஸ்டு 11ம் தேதி பதவியேற்கிறார். ஜெகதீப் தன்கர் ராஜஸ்தானில் பிறந்தவர். மேற்குவங்க ஆளுநராக பணியாற்றியவர். 1993ம் ஆண்டு எம்எல்ஏவாக தேர்வான அவர், எம்பியாவும் மத்திய இணையமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அவருக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.




