டெல்லி சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் பொது இயக்குநராக கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ் வழியில் பயின்றவர். இந்நிறுவனத்தின் பொதுஇயக்குநராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். நாடுமுழுவதும் 4500 விஞ்ஞானிகள் பணியாற்றும் 38 ஆராய்ச்சி மையங்களுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்ஐஆர் மையத்தில் விஞ்ஞானியாக தனது பணியை தொடங்கிய கலைச்செல்வி, எலக்ட்ரோகெமிக்கல் மின்சார சாதனங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 125க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 6 காப்புரிமைகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக, லித்தியம் அயர்ன் பேட்டரி துறையில் பல பங்களிப்புகளை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், எந்தப் பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம். மின்சாரம் முதன்முதலாக கண்டுபிடித்தபோது கரண்ட் அடிக்கும் என்றார்கள். இப்போது எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டுள்ளோம். அதேபோல் லித்தியம் பேட்டரி குறித்து விழிப்புணர்வு விரைவில் பரவலாகும் என்றார்.




