பாக்கெட்டில் அடைக்கப்பட்ட லேபிள் ஒட்டப்பட்ட அரிசி, தயிர், கோதுமைமாவு, பருப்புவகைகள், லஸ்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. அதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி விதித்து இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், “அன்றாட உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்தபிறகு இப்போது வீட்டு வாடகைக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.
திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சாகேத் கோகலே கூறும்போது, “இனிமேல் வீட்டு வாடகை 18% உயரும். ஏனென்றால் மோடி அரசு வீட்டு வாடகை மீது 18% ஜிஎஸ்டி விதித்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு இடையே சாதாரண மனிதர்களிடம் இருந்து ஒவ்வொரு ரூபாயையும் பறிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு தெரிவித்துள்ள விளக்கத்தில், “வீட்டை வாடகைக்கு விட்டால் ஜிஎஸ்டி கிடையாது. வணிக பயன்பாட்டுக்கு விட்டால்தான் 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும். மேலும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளரோ, பங்குதாரரோ ஒரு குடியிருப்பை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுத்தால் கூட ஜிஎஸ்டி கிடையாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.