பட்டியலின மாணவன் பானையை தொட்டு தண்ணீர் குடித்ததால் அவனை ஆசிரியர் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் இந்திர மேக்வல் (பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்) அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான்.
கடந்த 20ம் தேதி தாகம் எடுக்கவே, பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளான். இதை பார்த்த வகுப்பு ஆசிரியர் ஷாயில் சிங்(40) அவனை கடுமையாக தாக்கியுள்ளார். தாக்குதலில் முகம், கண்,காது என உடம்பின் பல இடங்களில் பலத்த காயமடைந்த அந்த சிறுவன் உதய்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தான். இந்த நிலையில் நேற்று, சிகிச்சை பலனின்றி இறந்து போனான். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஷாயில் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




