கொரோனா தடுப்பூசி போட்டதில் மாணவி பலியானதாக சீரம் நிறுவனத்திடம் ₹1,000 கோடி இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாசிக் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவி சினேகல். கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி உயிரிழந்தார். இவர் சாவுக்கு காரணம் கொரோனா தடுப்பூசி போட்டதுதான் எனக்கூறி அவரது தந்தை மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “எனது மகளுக்கு கல்லூரியில் கோவிசீல்டு தடுப்பூசி போடப்பட்டது. அதனால், சில நாட்களில் தீவிர தலைவலி, வாந்தியால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாக டாக்டர்கள் கூறினர். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தடுப்பூசி போட்டதன் பக்க விளைவால் அவள் உயிரிழந்துள்ளாள். எனவே, கோவிசீல்டு மருந்து தயாரித்த சீரம் நிறுவனம் ₹1,000 கோடி இழப்பீடு தர உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கங்காபுர்வாலா மற்றும் மாதவ் ஜாம்தார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது பதிலளிக்குமாறு சீரம் நிறுவனம், மத்திய, மகாராஷ்டிர அரசுகள், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.




