கடந்த சில தினங்களாக இல்லாத அளவிற்கு,நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 62 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் விளைவாக கொரோனா தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. அதிகரிக்கப்படும் பரிசோதனைகள் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் அதிகப்படியான பரிசோதனைகள் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டாலும், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் அது முக்கியமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு கடந்த 24 மணி நேரத்தில் குறைந்த அளவாக தேசிய அளவில், 61, 408 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து, இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,06,349 ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் மட்டும் 10,441 பேருக்கும், ஆந்திராவில் 7,895 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்து.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 836 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியானோரின் எண்ணிக்க்கை 57,468 ஆக அதிகரித்துள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 23,38,036 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.