இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 55,079 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பரவலின் வேகம் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேசமயம், நாட்டின் மொத்த பாதிப்பில் 4ல் ஒரு பங்கை மகாராஷ்டிரா மாநிலமும், அதை தொடர்ந்து தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாநிலங்களிலும் அதிகளவில் காணப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவிற்கு, 8,99,864 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம், புதியதாக 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27, 02, 743 ஆக அதிகரித்துள்ளது. இதில், சிகிச்சைக்கு பிறகு, 19,77,780 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பலனின்றி 876 பேர் உயிரிழக்க, கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51, 797 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவில்
அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்திய தொடர்ந்து 3ம் இடத்தில் நீடிக்கிறது.
நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலில் 6,73,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் மூலம், இந்தியாவில் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 30,09,41,264 அதிதிகரித்துள்ளது. உலகிலேயே அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிக கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்ட நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.