உள்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ராணுவ தளவாடங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து சுயசார்பு அடையும் நோக்கில், இந்தியா பலவேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, 101 ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களின் இறக்குமதிக்கு கடந்த 9ம் தேதி பாதுகாப்பு அமைச்சகம் தடை விதித்தது.
இந்நிலையில், இந்திய ராணுவ தொழிற்துறையில் சுயசார்பை அதிகரிப்பது குறித்த காணொலி கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது பல ஆண்டுகளாக மிகப்பெரிய ராணுவ தளவாட இறக்குமதியாளர்களில் ஒன்றாக இந்தியா இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரம் அடைந்த வேளையில், உள்நாட்டு ராணுவ உற்பத்திக்கான பெரிய திறனும், 100 ஆண்டுகளாக அதற்கான சூழலும் உருவாகி வந்ததாக தெரிவித்த மோடி, ஆனால் அந்த துறையில் தேவையான கவனம் செலுத்தப்படவில்லை என வேதனை தெரிவித்தார்.
தானியங்கி முறையில், உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியில் 74% வரை நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார். ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கவும், தனியார் பங்களிப்பை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மோடி தெரிவித்தார்.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சில ராணுவ தளவாடங்களின் இறக்குமதிக்கு அரசு தடைவிதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சுயசார்பு பாரதம் திட்டம் உள்நாட்டை நோக்கிய திட்டமல்ல என்ற அவர், சர்வதேச பொருளாதாரத்தையும், அமைதியையும் மேம்படுத்த இந்தியாவை தயார் படுத்தும் திட்டம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார்.
இதனிடையே, முப்படைகளின் ஆலோசனையை பெற்று, இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டிய 2ம் கட்ட பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் தயாரித்து வருவதாகவும், ஆண்டு இறுதியில் இப்பட்டியல் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.