அத்துமீறும் பாகிஸ்தான் மற்றும் சீனாவை எதிர்கொள்ளும் வகையில், இரு நாடுகளை ஒட்டிய எல்லையில் இந்திய ராணுவம் சக்தி வாய்ந்த பீரங்கி படைகளை நிறுத்தியுள்ளது.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானை தொடர்ந்து, லடாக் எல்லையில் கடந்த 6 மாதங்களாக சீன ராணுவம் இந்திய எல்லையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எல்லைப் பிரச்னை தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டாலும், இரு நாடுகளையும் ஒரே சேர எதிர்கொள்ள இந்திய ராணுவமும் , விமானப்படையும் முழு வீச்சில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நிர்பய் ஏவுகணைகளை தொடர்ந்து லடாக் எல்லைக்கு பீஷ்மா பீரங்கிகளை இந்திய ராணுவம் அனுப்பியுள்ளது.
ரஷ்யாவின் தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 48 டன் எடையும், 31 அடி நீளமும், 12.5 அடி அகலமும், 7 அடி உயரமும் கொண்ட பீஷ்மா பீரங்கிகள் லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு பதிலடி தர தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
பீஷ்மா, தொடர்ந்து 43 முறை சுடும் திறன் கொண்ட பெரிய பீரங்கி, ஆற்றல் மிக்க எந்திர துப்பாக்கி, புகை குண்டுகளை வீசும் துப்பாக்கி, இரவிலும் துல்லியமாக குறி பார்த்து இலக்கை தாக்கும் வசதி, எதிரிகளின் குண்டுகளால் துளைக்க முடியாத கவசம் என பல்வேறு நவீன வசதிகளை கொண்ட்டுள்ளது.
மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 550 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில்லாமல் ஓடும் ஆற்றல் கொண்ட பீஷ்மாவுக்கு இணையான பீரங்கி சீனாவிடம் இல்லை . இதே நேரத்தில் எல்லையில் சீனா நிறுத்தி வைத்துள்ள டி 63 , டி 99 இலகு ரக பீரங்கிகள் பீஷ்மாவின் சக்திக்கு இணையாகாது என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆற்றல் மிக்க பீஷ்மா பீரங்கி படைகள் மூலம் சீனாவுக்கு எதிராக ராணுவம் வியூகம் வகுத்துள்ளது. இதே நேரத்தில் பாகிஸ்தானை ஓட ஓட விரட்ட இந்திய விமானப்படை, விமானப்படையை சேர்ந்த ரபேல் விமானங்களை களம் இறக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே, ரபேலுக்கு இணையான போர் விமானம் எதுவும் பாகிஸ்தானிடம் இல்லாத நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி பாஜ்வா, ரபேல் விமானங்களை இந்தியா பயன்படுத்தினால் போரின் நிலை மாறும் என்றும், அந்நாட்டு விமானப்படை தளபதி அன்வர் கான் ரபேல் விமானங்கள் மூலம் இந்தியா தாக்கும் அபாயம் உள்ளது என அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.