இந்தியாவின் 30 நகரங்கள் 2050ஆம் ஆண்டுக்குள் குடிநீர் பஞ்சத்தில் சிக்க வாய்ப்பு உள்ளதாக, பன்னாட்டு காட்டுயிர் நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது.
அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை தேவையாக உள்ள நீருக்காக தான், மூன்றாம் உலகப்போர் என்பது ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் மாசுபாடு காரணமாக குடிநீர் நுகர்வு என்பது பாதிக்கப்படுவதும் அதையே காட்டுகிறது. போதிய மழைப்பொழிவின்மை, நீர் ஆதாரங்கள் அழிப்பு போன்றவையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்த சூழலில் பன்னாட்டு காட்டுயிர் நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2050ஆம் ஆண்டில் குடிநீர் பஞ்சத்தில் சிக்க இருக்கும் 100 நகரங்களின் பட்டியலில் 30 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையை உடனடியாக எடுக்காவிட்டால், எதிர்பார்க்க முடியாத குடிநீர் பஞ்சத்தில் சிக்க வாய்ப்புள்ளது என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், அதிக நீர் ஆபத்து உள்ள பகுதிகளின் மக்கள் தொகை 2020இல் 17%-ல் இருந்து 2050க்குள் 51% உயரக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 35 கோடி மக்கள் வசிக்கும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் தான் இந்த நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, லூதியானா, சண்டிகர், அமிர்தசரஸ், அகமதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர், இந்தூர், அமிர்தசரஸ், புணே, ஸ்ரீநகர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கோழிக்கோடு மற்றும் விசாகப்பட்டினம் ஆகி நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
“இந்தியாவின் சூழலின் எதிர்காலம் அதன் நகரங்களில் உள்ளது. இந்தியா விரைவாக நகரமயமாக்கப்படுவதால், நகர்ப்புற நீர்நிலைகள் மற்றும் ஈரநிலங்களை மீட்டெடுப்பது போன்ற இயற்கையை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளே தீர்வுகளை வழங்கக்கூடும்.” என்று பன்னாட்டு காட்டுயிர் நிதியம் அறிவுறுத்தியுள்ளது.