அமெரிக்காவின் ‘டிரேஸ்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்கான அபாயம் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 45 புள்ளிகளுடன் 77-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள அன்னாபொலிஸ் நகரில், லஞ்சத்துக்கு எதிரான சா்வதேச அமைப்பான ‘டிரேஸ்’ என்ற லஞ்ச ஒழிப்பு அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பானது, தொழில்களில் அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்கான அபாயம் நிறைந்த நாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி, பட்டியலிட்டு வருகிறது. இந்த அமைப்பு பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு லஞ்ச மதிப்பிட்டு பட்டியலை தயாரிக்கிறது.
அதன்படி இந்த ஆண்டும் 194 நாடுகளில் காணப்படும் லஞ்ச அபாயம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை அந்த அமைப்பு அண்மையில் வெளியிட்டது. இதில் இந்தியா 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில், இந்தியா 48 புள்ளிகளுடன் 78-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
லஞ்சம் குறைவாக உள்ள நாடுகள் பட்டியலில் டென்மார்க், நார்வே, ஃபின்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. மேற்கூறிய நாடுகளில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது குறைவாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடைசி இடங்களில் வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தெற்கு சூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகிய நாடுகள் உள்ளது.
மேலும், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்தியாவை விடப் பின்தங்கியே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.