ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த கிரிஷ் சந்திர முர்மு, தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக நியமித்து மத்திய அரசு நேற்று இரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக இருக்கும் ராஜீவ் மெஹ்ரிஷியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவத்தையடுத்து,அந்தப் பதவிக்கு முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி பதவி என்பது அரசியலமைப்புச் சட்ட பதவியாகும். அதாவது, மத்திய அரசு, மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பு உள்ள பதவி என்பது குறிப்பிடத்தக்கது. தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் அனைத்தும் மாநில சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
இதுகுறித்து பொருளதாார விவகாரத்துறை நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் “ தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்முவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார் என்றும், அவர் அந்த பதவி ஏற்கும் நாளிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வரும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி பதவியில் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவடையும் வரை முர்மு பதவியில் வகிப்பார். இதில் எது முதலில் வருகிறதோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் . தற்போது முர்முவுக்கு 61 வயதாகிறது.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டபின்பு , முதல் துணை நிலை ஆளுநராக முர்மு நியமிக்கப்பட்டார். துணை நிலை ஆளுநராக பதவி ஏற்று ஓர் ஆண்டு நிறைவடைவதற்குள் , நேற்று முர்மு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அந்த ராஜினாமாவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1985-ம் ஆண்டு குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஜி.சி.முர்மு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதும், அமித் ஷா அமைச்சராக இருந்தபோதும் அவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றியவர்.
மத்திய அரசின் தலைமை தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த ராஜீவ் மெஹரிஷியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அந்த பதவியில் முர்மு நியமிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.