மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுமையாக நிறைவடைய இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என்று மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நிறைவடைய இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆகும் மற்றும் எத்தனை திட்டங்கள் முடிவடைந்துள்ளன என்பது குறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர் தீப் சிங் பூரி அளித்த பதிலில்,செப்டம்பர் 2016 ல் அறிவிக்கப்பட்ட இரண்டாவது சுற்றில் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைக்கப்பட்டது. 977.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட 14 திட்டங்களில் ரூ.12 கோடி செலவிலான ஒரு திட்டம் முடிந்துள்ளது.
மேலும்,பாரம்பரிய வழிகள், தெருக்களின் வடிவம், பெரியார் பேருந்து நிலைய மறு மேம்பாடு, சுற்றுலா வசதிகள், வைகை ஆறு மேம்பாடு, மாநில அளவிலான தகவல் தொழில் நுட்ப கட்டுப்பாட்டு மையம்,மண்டலம் 1,2,3, 4 ஆகியவற்றின் தெரு விளக்கு நவீன மயம், பல் தட்டு கார் நிறுத்தம், தண்ணீர் அளிப்பு பகிர்வு, முல்லைப் பெரியார் அணையில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் அளிப்பு மேம்பாடு, தமுக்கம் மைதானத்தில் கலையரங்கம், புதிய விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடை ஆகிய ரூ 965.55 கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் துவங்குவதற்கான வேலை ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவை இன்னும் 5 ஆண்டுகளில் முழுமையாக முடிவடையுமென எதிர்பார்க்கிறோம். பழச்சந்தையில் கட்டுமான மற்றும் அடிப்படை வசதிகள் என்கிற ரூ.12 கோடி திட்டம் நடந்து முடிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.