பாபர் மசூதியை யாருமே இடிக்கவில்லை என்பது இன்றைய வேதனையாக உள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நேற்று அதிபர் டிரம்ப் மற்றும் பிடென்க்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது பற்றியும், பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு பற்றியும் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மற்றும் பிடன் நேற்று முதன் முறையாக நேருக்கு நேர் விவாதமிட்டனர். அதில் ஜோ பிடன் கொரோனா பரவல் பற்றி வினாவினார், அதற்கு பதிலளித்த டிரம்ப் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கொரோனா இறப்பின் எண்ணிக்கையை மறைப்பதாகவும், அந்த நாடுகளில் இருந்து தான் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப சிதம்பரம், “கொரோனா இறப்பு எண்ணிக்கையை இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகள் மறுப்பதாகவும் மேலும் காற்று மாசுப்பாட்டுக்கு இந்த மூன்று நாடுகள் தான் காரணம் எனவும் டிரம்ப் கூறியுள்ளார், இன்னொரு முறை மோடி தனது நண்பரை அழைத்து நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை நடத்துவரா” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நேற்றைய பாபர் மசூதி தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் பாபர் மசூதி வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லையென 32 பேரையும் விடுதலை செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ப. சிதம்பரம் ‘உச்சநீதிமன்றம் அளித்து இருந்த தீர்ப்பை மறுக்கும் வகையிலும், பொது அறிவு மற்றும் தர்க்கத்தை மீறும் வகையில் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. யாருமே மசூதியை இடிக்கவில்லை என்பது இன்றைய வேதனையான அழுகையாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.