இந்தியாவை போல உலகில் எந்த நாட்டில் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இல்லை. ஓவ்வொரு தனி மனிதரின் மருத்துவ ஆவணங்கள் சேகரித்து வைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் மின்னணு திட்டத்தை இன்று பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா கலந்து கொண்டார்.திட்டத்தினை துவக்கி வைத்த பின்பு பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளாக சுகாதார கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய பாதையில் இன்று முதல் பயணிக்க உள்ளோம். இந்தியாவை போன்ற டிஜிட்டல் உள் கட்டமைப்பு முன்னேற்றம் கண்ட நாடு உலகில் வேறு எங்கும் இல்லை காரணம், நாட்டு மக்களை டிஜிட்டல் கட்டமைப்பு மூலம் ஒன்றிணைத்து உள்ளோம்.
உதாரணமாக, 130 கோடி ஆதார் அட்டைகள், 118 கோடி மொபைல் சந்தாதார்கள் , 80 கோடி இணைய பயனாளர்கள் மற்றும் 43 கோடி ஜன்தன் வங்கி கணக்கு என நாட்டின் உள்கட்டமைப்பு டிஜிட்டல் முறையில் பலப்படுத்தப்பட்டுள்ளது. உலகமே கொரோனா சமயத்தில் முடங்கிய போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு டிஜிட்டல் முறையில் “ஆரோக்கிய சேது” செயலி மூலம் மிக பெரிய அளவில் வெற்றியை சந்தித்தது என்றார். பரவலை கட்டுப்படுத்திய பின்பு ஜனவரி மாதம் முதல் இன்று வரை தடுப்பூசி இயக்கம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 90 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கும் காரணம் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட “கோவின்” செயலியே என பிரதமர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், கொரோனா சமயத்தில் வீட்டிலே முடங்கி கிடந்த மக்கள் மருத்துவ ஆலோசனைகளை பெற டேலி மெடிசன் திட்டம் அதாவது “இ-சஞ்ஜீவினி” திட்டத்தின் மூலம் நாட்டில் 130 கோடி மக்கள் பயனடைந்து உள்ளனர் என்றார். மருத்துவ துறையில் ஒரு மைல் கல்லாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 2கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் இதில் பெரும்பாலானோர் பெண்களே என பேசிய பிரதமர் இனிமேல் வரும் நாட்களில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் மருத்துவ ஆவணங்கள் சேகரித்து வைக்கப்படும் எனவும் நாட்டில் உள்ள ஓவ்வொரு மருத்துவமனையுடன் டிஜிட்டல் கட்டமைப்பு மேம்படும் என்றார். இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு எப்படி மேம்படுத்துகிறது என்றால் கடந்த 7-8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் அதிக அளவில் மருத்துவ பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என பிரதமர் மோடி பேசினார்.




