இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியேற மறுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் இன்று மட்டும் 4 முறை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களவையில் 3 வேளாண் மசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதில் 2 முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் அரசுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், குளறுபடி செய்து குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அத்துடன், அவையை வழிநடத்திய துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக மனுவும் அளித்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாநிலங்களவை இன்று காலை 9 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, அவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளின் 8 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன், துணை சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட பொழுது அவை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
10 மணிக்கு அவை கூடியபோதும் அமளி தொடர்ந்து நீடித்த போது, உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் உடனடியாக அவையை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவையை தலைமை தாங்கி நடத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வலியுறுத்தினார். இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அவையில் இருக்க தகுதி இல்லை என்றும், உறுப்பினர்கள் அல்லாதவர்களின் முன்னிலையில் சபை செயல்பட முடியாது என்றும் முரளிதரன் எம்.பி தெரிவித்தார்.
எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதன் காரணமாக 10.36 வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் 11.07 மணி வரை, 12 மணி வரை என அடுத்தடுத்து அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.