“ஹிந்தி தெரியாது போடா” என்ற ஒரே ஒரு டீ-ஷர்ட் வாசகம் தேசிய அளவில் ட்ரெண்டாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாட்டின் பன்முகத்தன்மைக்கு தமிழகத்தில் என்றும் முழு ஆதரவு கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதேசமயம், ஒரு விஷயத்தை கட்டாயப்படுத்தி மக்களிடையே திணிக்க முயன்றால், அதற்கான முதல் எதிர்ப்பு குரல் தமிழகத்தில் இருந்து எழும் என்பதே வரலாறு. அன்று காங்கிரஸ் தொடங்கி இன்று பாஜக வரை, இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க எத்தனை முயற்சி எடுத்தாலும், அதற்கு தமிழகத்தில் எழும் எதிர்ப்புகளின் வீரியம் இம்மி அளவும் குறையாததே அதற்கு சான்று.

சமீபத்தில் திமுக எம்.பி கனிமொழி இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். அதுபோல 2011ஆம் ஆண்டு, டெல்லி விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் அவமதிக்கப்பட்டதாகத் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார. சில தினங்களுக்கு முன்பு மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்திய மருத்துவர்கள் கருத்தரங்கில் இந்தி தெரியாதவர்கள் வெளியே செல்லலாம் என்று ஆயுஷ் அமைச்சகச் செயலர் கூறியிருந்தது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சிரிஷ் உடன் சேர்ந்து புகைப்படம் ஒன்று வெளியிட்டு இருந்தார்.
அதில், சிரிஷின் டி-ஷர்ட்டில் ஹிந்தி தெரியாதுபோடா என்ற வாசகமும், யுவன் சங்கர் டி-ஷர்ட்டில், ‘i am a தமிழ் பேசும் இந்தியன்’ என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது.

யாரும் எதிர்பாராத விதமாக டி-ஷார்ட்டில், #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகத்தையே தற்போது ஹேஷ்-டேக் ஆக மாறி தேசிய அளவில் ட்ரெண்டாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. பல திரைத்துறை நட்சத்திரங்களும், இளைஞர்களும் கூட இதே வசனங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை அணிந்து, அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்தியை திணிக்கும் முயற்சியை, மீம் வடிவில் இதே ஹேஷ்-டேக்கில் பலர் கிண்டலடித்து வருகின்றனர்.
ஹிந்தியை கட்டாயமக்கும் முயற்சிக்கு தமிழகத்தில் திமுக தான் பல காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், கட்டாயமாக திணிக்கப்படும் எதையும் ஏற்றுக்கொள்ளும் நபர்கள் அல்ல நாங்கள் என்ற மன உறுதி கொண்ட தமிழர்களின் தன்னிச்சையான எதிர்ப்புகளை, திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது என்பதே உண்மை.

கோபேக்மோடி என்ற ஹேஷ்_டேக்கும் இப்படியான வகையிலேயே ட்ரெண்ட் அடித்தது. இது பாஜகவிற்கு எதிராக மக்களின் மனதில் உள்ள நிலைப்பாடு என்பதை புரிந்து கொள்ளாமல், திமுகவின் ஐடி விங் தான் அதனை ட்ரெண்ட் செய்ததாக பாஜக பேசியது தனி கதை.
சொல்ல போனால், பாஜகவிற்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டான பல ஹேஷ்-டேக்குகள் திமுகவிற்கே ஆச்சரியத்தை அளித்தது என்பது தான் உண்மை.

அதற்கு சான்று, தற்போது யாரும் எதிர்பாரத விதமாக ட்ரெண்டாகியுள்ள #ஹிந்திதெரியாதுபோடா என்ற ஹேஷ்_டேக் ஆகும். திமுக எம்.பி கனிமொழி கூட, இது ஆச்சரியம் அளிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹிந்தியை கட்டாயப்படுத்தும் முயற்சிக்கு தமிழகத்தில் எழும் எதிர்ப்புகள் எந்தவொரு கட்சியையும் சார்ந்தது அல்ல. அது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உணர்வு என்பதே உண்மை.




