கொரோனா தடுப்பு முன்களப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவப் படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டு ஊரடங்கை தொடர்ந்து, பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கினர். ஆனாலும், மருத்துவம், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்கள் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவத்தில் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டு வந்தனர்.
குடும்பத்தை பிரிந்து பொதுமக்கள் சேவையில் ஈடுபட்ட மருத்துவர்கள், சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு மாணிக்க அரசுகள் சார்பில் பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவ கலந்தாய்வில் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா தடுப்பு முன்களப் பணியின்போது உயிரிழந்தவர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் மருத்துவக் கல்வியில் உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
தன்னலமின்றி கொரோனா தடுப்பு முன்களப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகள் இந்த உள்ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெறலாம் என, ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்