நாட்டின் உயர்ந்த பணமான 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டது என, ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ‘2019-20 நிதியாண்டோடு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 2018 மார்ச் மாதம் 33,632 லட்சம் எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும்,
2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த எண்ணிக்கை 32,910 லட்சம் நோட்டுகளாக குறைந்து, 2020-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 27,398 லட்சம் எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளே புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த ரூபாய் எண்ணிக்கையில் ரூ.2000 நோட்டின் பங்கு கடந்த 2018 மார்ச்சில் 3.3% எனவும், 2019-ம் ஆண்டு மார்ச் முடிவில் அதன் புழக்கம் 3 சதவீதமாகக் குறைந்து, 2020 ஆம் ஆண்டு மார்ச் முடிவில் 2.4 சதவீதம் அளவாகக் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதிப்பின் அடிப்படையில் 2018 மார்ச் மாதம் 37.3 சதவீதம் இருந்த நிலையில், 2019 மார்ச் இறுதியில் 31.2 சதவீதமாகச் சரிந்தது. 2020 மார்ச் முடிவில் 22.60 சதவீமாகக் குறைந்துள்ளது. அதேசமயம், ரூ.500, ரூ.200 நோட்டுகளின் புழக்கத்தின் அளவு, மதிப்பின் அளவு , எண்ணிக்கையின் அளவு கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
மேலும், 2019-20 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி சார்பில் 2 ஆயிரம் ரூபாய் அச்சடிக்க, பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முந்த்ரன் பிரைவேட் லிமிட், செக்யூரிட்டி பிரிண்டிங் அன்ட் மின்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிட் ஆகியவற்றுக்குப் புதிதாக எந்த ஆர்டரும் வழங்கவில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.