இந்தியாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான காகங்களும், பறவைகளும் இறந்து வருகின்றன.
கடந்த 4 ஆம் தேதி ராஜஸ்தானில் 425 பறவைகள் பறவை காய்ச்சலால் இறந்துள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. அவற்றில் அதிகமாக காக்கைகள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேபோன்று, மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளிலும் காகங்கள் இறந்துள்ளன. இதேபோல பறவைகள் அதிகமாக வந்து செல்லும் இமாசல பிரதேசத்தில், பல பறவை இனங்கள் இறந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள காங்ரா மாவட்டத்தின் பாங் டேம் லேக் சரணாலய பகுதி சுற்றுவட்டாரத்தில் 1,800 பறவைகள் இறந்துள்ளன.
கேரளாவில் கோட்டயத்தில் நீண்டூர் என்ற இடத்தில் ஒரு வாத்து பண்ணையில் நோய் பரவியிருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். அங்கு 1,500 வாத்துகள் இறந்துள்ளன. இதேபோல ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு மண்டலத்தில் உள்ள சில பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் தாக்கி உள்ளது. வளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் எச்.5.என்.8. வைரஸ் பரவுவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.
கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9ஆம் தேதி 200க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன. டெல்லியில் பல்வேறு பூங்காக்களிலும் காகங்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் மயூர் விகார் பகுதியில் உள்ள மத்திய பூங்காவில் 200 காகங்கள் இறந்துள்ளன. அவற்றில் 5 காகங்களின் உடல்கள் அதிகாரிகளால் எடுத்து செல்லப்பட்டன. அவற்றை ஜலந்தர் நகரில் பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து பூங்காவில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தன. பார்வையாளர்களுக்கு தடை விதித்து, பூங்கா மூடப்பட்டது. டெல்லியின் துவாரகா பகுதியில் டி.டி.ஏ. பூங்காவில் 2 காகங்களும், மேற்கு மாவட்டத்தில் ஹஸ்த்சால் கிராமத்தில் 16 காகங்களும் இறந்தன. இதுபற்றி விரைவு பொறுப்பு குழு ஒன்றை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளும்படி டெல்லி துணை முதல்அமைச்சர் மணீஷ் சிசோடியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
துவாரகா பகுதியில் 14 காகங்களும், ஹஸ்த்சால் பூங்காவில் 16 காகங்களும் இறந்து கிடந்துள்ளன. டெல்லி வளர்ச்சி கழகத்தின் 15 பூங்காக்களில் நேற்று மொத்தம் 91 காகங்கள், 27 வாத்துகள் உயிரிழந்து கிடந்தன. இதனை தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின்படி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 104 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பறவை காய்ச்சல் பற்றிய பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.