தெலுங்கானாவில், சேவல் சண்டைக்கு தயார்படுத்தி வந்த சேவல் தாக்கியதில், அதன் உரிமை யாளர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்.

தெலுங்கானாவில் லோத்தன்னுார் கிராமத்தில், 16 பேர் அடங்கிய குழுவினர், சேவல் சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.சில தினங்களுக்கு முன், அங்கு சேவல் சண்டை நடந்தது. சண்டையில் கலந்து கொண்ட சேவல் ஒன்றின் காலில், கூர்மையான கத்திகள் கட்டப்பட்டிருந்தன. போட்டிக்கு தயார்படுத்தப்பட்டபோது, சேவல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது. அதை, உரிமையாளர் பிடிக்கவே, அந்த சேவல் தன் கால்களால், அவரை தாக்கியது. அப்போது, காலில் கட்டப்பட்டிருந்த கத்தி, அவரின் இடுப்பை பதம் பார்த்தது.படுகாயமடைந்த அவர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அதிக ரத்தம் வெளியேறியதால், அவர் உயிரிழந்தார். சேவல் சண்டையை ஏற்பாடு செய்தவர்களில் உயிரிழந்த நபரும் ஒருவர் என்பது தெரியவந்து உள்ளது. சட்டவிரோதமாக இந்த போட்டியை ஏற்பாடு செய்த மீதமுள்ள, 15 பேரை தேடும் பணிகளில், போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.




