107 நாடுகள் இடம்பெற்றிருக்கும் சர்வதேச பட்டினிப் பட்டியலில், இந்தியா 94-வது இடத்தில் இருக்கிறது.
உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள், ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கை, 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் பலி விகிதம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக வைத்து, சர்வதேச பட்டினிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் இந்தியா 94-வது இடத்தில் இருக்கிறது.
கடந்த ஆண்டு 102-வது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 8 இடங்கள் முன்னேறி 94-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனாலும், வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை விட இந்தியாவை பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான நேபாளம் 73-வது இடத்திலும், வங்கதேசம் 75-வது இடத்திலும் பாகிஸ்தான் 88-வது இடத்திலும் உள்ளன.
ஆய்வின்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 14 சதவிகிதத்தினர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொடர்ந்து ‘கடுமையான’ பசி பிரிவில் இந்தியா உள்ளது வேதனையளிப்பதாக உள்ளது. மேலும், இந்தியாவில் குழந்தை இறப்பு, 3.7 சதவீதமாகவும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
132 நாடுகளில் பட்டினியால் வாடும் மக்களின் விவரங்களைக் கணக்கெடுத்த இந்த ஆய்வில், வெறும் 107 நாடுகளின் புள்ளி விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே பதிவான புள்ளி விவரங்கள் என்றும், கொரோனா காரணமாக ஏற்பட்ட தாக்கம் இதில் இன்னும் பதிவாகவில்லை என்றும் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தெற்காசியா மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா சஹாராவின் பகுதிகளில், உலகளாவிய பிராந்தியங்களில் மிக மோசமான பசி நிலைகள் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலைமைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, முடிந்தவரை உணவை வீணடிக்காமல், இல்லாதவர்களுக்கு பகிர்ந்துக் கொடுக்க முடிவெடுப்போம். பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்போம்… முன்மாதிரியாக இருப்போம். நம்மால் முடிந்த சிறு உதவிகளை செய்வோம்…