அரியானாவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறையினருக்கு சீக்கிய இளைஞர்கள் உணவு அளித்தனர்.இந்த நிகழ்வு பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அரியானா :
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து இந்தியா முழுவதும் ஆங்காங்கே தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.கடந்த 4 நாட்களாக “டெல்லி சலோ” என்ற வாசகத்தை பயன்படுத்தி டெல்லியை நோக்கி பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோல் நேற்று டெல்லியில் போராட்டம் நடத்த நடைப்பயணமாய் வந்த விவசாயிகள் காவல்துறையினரால் அரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காவல்துறையினர் அவர்களை விரட்டி அடிக்கும் நோக்கத்தில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.அங்கு ஏற்பட்ட பதற்றத்தால் உணவு, தண்ணீர் கிடைப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சீக்கிய இளைஞர்கள் சிலர் காவல்துறையினருக்கு உணவு வழங்கினர்.தற்போது இந்த நிகழ்வானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினாலும், அதை நினைக்காமல் சீக்கிய இளைஞர்கள் சிலர் காவல்துறையினருக்கு உணவு வழங்கியதை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.