இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி :
இங்கிலாந்து நாட்டில் வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வைரஸானது சூழ்நிலைக்கு தகுந்தார் போல வளர்சிதை மாற்றம் அடைந்தும், இதன் பரவும் தன்மை 70 சதவீதம் அதிகம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டிபிடித்துள்ளனர்.
இந்தநிலையில் இங்கிலாந்து நாட்டிற்கு செல்லும் விமான போக்குவரத்துக்களை பல்வேறு நாடுகள் தடை விதித்து வருகின்றனர். இந்தியாவிலும் விமான போக்குவரத்து சேவை கடந்த 23 ம் தேதி முதல் வருகின்ற 31 ம் தேதி வரை தடை விதித்தது.
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கடந்த நவம்பர் 25 ம் தேதி முதல் டிசம்பர் 23 ம் தேதி வரை பயணம் செய்த பயணிகளை கண்டறிந்து தனிமை படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு வந்தது. பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 33,000 நபர்களில் 116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
Read more – கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் பெங்களூரில் 3 பேருக்கும், ஐதராபாத்தை சேர்ந்த 2 பேருக்கும், புனேவை சேர்ந்த 1 நபருக்கும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.




