காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே, ஜனவரி மாதம் பனியில் சிக்கி மாயமான ராணுவ வீரரின் உடலை, எட்டு மாதங்களுக்கு பின் நேற்று முன்தினம் ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
ராஜேந்திர சிங் நேகி, 36 வயது. உ.பி.,யின் சாமோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.இவர், மனைவி ராஜேஸ்வரி தேவி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நம் இந்திய ராணுவத்தில், 2001ல் இணைந்த இவர், ‘கார்வால் ரைபிள்ஸ்’ பிரிவில், ஹவில்தாராக பணியாற்றினார்.
ராஜேந்திர சிங் நேகி, கடந்த ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே பணியில் இருந்த போது, எதிர்பாராத விதமாக பனியில் தவறி விழுந்து காணாமல் போனார்.ராணுவம் எவ்வளவோ முயன்றும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவரை, மூன்று மாதங்கள் வரை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், பணியில் வீர மரணம் அடைந்ததாகக் கூறி, அவரை ஒரு ‘தியாகி’ என்று ராணுவத்தினர் அறிவித்தனர். ஆனால், ராணுவத்தின் முடிவை ஏற்க மறுத்த அவரது மனைவி ராஜேஸ்வரி தேவி, ‘கணவரின் உடலை கண்களால் காணும் வரை தியாகி பட்டத்தை ஏற்கமாடேன் என மறுத்துவிட்டார்.
இதனையடுத்து ராணுத்தினர் மீண்டும் தேடுதல் நடத்தினர். இதன் விளைவாக, அடர்ந்த பனியில் சிக்கியிருந்த காணாமல் போன ராணுவ வீரரின் உடலை ராணுவத்தினர் மீட்டனர். இதுகுறித்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ராஜேந்திர சிங் நேகியின் உடல் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், நாளை மறுநாள், குடும்பத்தினரிடம், ராஜேந்திர சிங் நேகியின் உடல் ஒப்படைக்கப்படும் எனவும், ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.