கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் மைனஸ் 6 முதல் 9 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என பாஜ., மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்
தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரேதச கிளைகள் மற்றும் இந்திய – அமெரிக்க வர்த்தக சபை சார்பில் காணொலி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பாஜ., மூத்தத் தலைவர், சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியும். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 6 முதல் மைனஸ் 9 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கிறேன். பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளாகவே சீர்குலைந்து விட்டது. இதைச் சுட்டிக்காட்டி பலமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவிட்டேன்.
பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்கு திருப்புவது?. என்று ஒருவர் கேட்டபோது, அவர் பதில் அளிக்கையில் ” நம்மிடம் உற்பத்தி செய்வதற்கான அனைத்து வளங்களும், திறனும் இருக்கிறது. லாபமுள்ள வகையில் உற்பத்தி செய்வதிலும், விற்பதிலும் தான் பிரச்னையாக உள்ளது. தொழிற்சாலைகளுக்கு தேவையான அளவு தொழிலாளர்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்கள் அனைவரும் மீண்டும் பணிக்குத் திரும்பிவிடுவார்கள். இவை அனைத்தும் நடந்தால் அடுத்த நிதியாண்டில் (2021-22) இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.
ஆனால், இவை நடக்க சரியான பொருளாதாரக் கொள்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாகப் பின்பற்றிய கொள்கைகளை பின்பற்றக்கூடாது. பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது, சீர்குலைவை நோக்கிச் செல்கிறது என எச்சரித்து பிரதமர் மோடிக்கு பல தருணங்களில் நான் கடிதம் எழுதியிருக்கிறேன். கடந்த 4 நாட்களுக்கு முன்புகூட இந்த நிதியாண்டு இறுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதை விவரித்து கடிதம் எழுதினேன்.
கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், தொழிற்சாலை, நிறுவனங்களை மீட்க மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நேரடியாக தேவையை உருவாக்கிக் கொடுக்காது. இந்த நேரத்தில் நேரடியாகத் தேவையை உருவாக்க ரூ.1.50 லட்சம் கோடி போதும். இந்தியாவிடம் அபரிமிதமான மனிதவளம் இருக்கிறது. ஜப்பான் நாடுபோல் முறைப்படி பயன்படுத்தினால், நாம் சிறந்த வளர்ச்சியை அடைய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.