ஆந்திராவில் பேராசிய தம்பதியினர் பெற்ற மகள் இருவரை மூடநம்பிக்கையால் அடித்து கொன்று நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர்:
ஆந்திரா சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை அடுத்த சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம் நாயுடு, இவரின் மனைவி பத்மஜா. இவருக்கு அலேக்யா (27), சாயி திவ்யா (22) என்ற மகள்களும் உள்ளனர். புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பத்மஜாவும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் பேராசிரியராக உள்ளார்.
மூத்த மகள் அலேக்யா மேனேஜ்மென்ட் ஆஃப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படிப்பிலும், இளைய மகள் சாயி திவ்யா ஏ.ஆர்.ரகுமான் இசை கல்லூரியில் இசை பயின்று வந்துள்ளார். இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக இருவரும் வீட்டிலேயே பெற்றோருடன் தங்கி உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் அற்புதங்கள் நடத்துவதாக கூறி அந்த தம்பதியினர் அடிக்கடி அதீத அளவு பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர்.
Read more – தமிழகத்தில் 16 ஜோடி தனியார் ரயில்கள் இயக்க திட்டம் : மத்திய அரசின் புதிய வியூகம்
நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) இரவு வீட்டில் பூஜை செய்வதாக கூறி சாய் திவ்யாவை மற்றும் அலெக்கியாவை நிர்வாண படுத்தி மொட்டை அடித்துள்ளனர். அதன்பிறகு உடற்பயிற்சி செய்யும் தம்புல்ஸ் மூலம் அவர்கள் இருவரையும் தலையில் அடித்து கொலை செய்துள்ளனர். இவர்களின் வீட்டிலிருந்து வரும் கதறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி ரவி மனோகராச்சாரி போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டதன் காரணமாக இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து பெற்றோர்களிடம் விசாரித்த போது ஒரு இரவு காத்திருங்கள் என் குழந்தைகள் உயிர்த்தெழுவார்கள் என்று மீண்டும் மீண்டும் அதையே தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இரு பெண்களின் உடல்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.