பட்டாசு உற்பத்தியாளர்கள் கடுமையான விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு உள்ளீர்கள்! உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது ? என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டெல்லி, பட்டாசு வெடிப்பது காரணமாக கடுமையான காற்று மாசுபாடு ஏற்படுகிறது என கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதித்தது. இதனை தொடர்ந்து தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தளர்வுகள் வழங்கப்பட்டது.
பட்டாசு தயாரிக்கும் போது அதில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்படுத்தும் ரசாயன பொருட்களை சேர்க்காமல் பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ள நேர கெடுவை காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம் என உயர்த்தித் தருமாறு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர் ஷா தலைமையிலான அமர்வு முன்பு நாட்களாக நடைபெற்று வருகிறது.
நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற பொழுது ஏன் தடை செய்யப்பட்ட பொருட்களை பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்துகிறீர்கள்? என பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சிபிஐ இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அரசு ஆய்வகங்களில் பட்டாசுகளின் மாதிரிகளை அனுப்பி வைத்து அதன் மூலம் கிடைக்கப்பெற்ற அறிக்கைகளை கொண்டு முதல்கட்ட விசாரணை முடிவுகளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதை ஆய்வு செய்த நீதிபதிகள் சிபிஐயின் ஆரம்பகட்ட விசாரணை முடிவுகளின் மூலம் பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான விதிமுறை மீறல்களில் ஈடுபடுவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என குறிப்பிட்டனர்.
குறிப்பாக
- ஸ்டாண்டர்ட் ஃபயர் வொர்க
- ஹிந்துஸ்தான் ஃபயர் வொர்க்
3.விநாயகா பயர் ஒர்க்ஸ் 4.மாரியம்மா ஃபயர் வொர்க்ஸ்
5.சூரியகலா ஃபயர் வொர்க்ஸ்
6.செல்வ விநாயகர் பயர்பாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மிக அதிக அளவில் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பாக தடை செய்யப்பட்ட “பேரியம் உப்பு” வகைகளான ரசாயன பொருட்களை பயன்படுத்துவதாகவும் இது மிகவும் மோசமான விஷயம் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், நமது நாட்டில் எல்லாவற்றிலும் கொண்டாட்டங்கள் தான் இன்னும் சொல்லப்போனால் கொண்டாட்டங்கள் மிகவும் அவசியமானதும் கூட!! நாங்கள் கூட மக்கள் எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு விரும்புகிறோம்! ஆனால் அதற்காக அது மற்றவர்களை துன்புறுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்றும் இப்படி தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை வெடிப்பதன் மூலமாக ஆஸ்துமா நோயாளிகள் வயதானவர்கள் குழந்தைகள் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனை அடுத்து உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள் சிபிஐ கண்டறிந்த ஆரம்பகட்ட அறிக்கைகள் பட்டாசு நிறுவனங்கள் விதிமுறைகளை மீறுவதை கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் நிறுவனங்கள் பதில் அளிக்க வேண்டும் என்றும் இந்த பதிலை சிபிஐக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதேபோல தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிப்பதற்காக உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை விளக்குமாறு பட்டாசு உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு “சோகாஸ் நோட்டீஸ்” பிறப்பிக்கப்பட்டது.
அதேபோல பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசத்தை காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்ற பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் கோரிக்கை மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
சிபிஐ மேற்கொண்டு முழு அறிக்கையையும் தயாரிக்க அறிவுறுத்தல் வழங்கியதோடு வழக்கின் விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.




