மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமி நாசினியை தடை செய்வது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதன் முதல் உலக அளவில் கிருமி நாசினி பயன்பாடு அதிகரித்துள்ளது. நோய்த்தொற்று பரவலை தடுக்க உரிய தடுப்பூசி ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், மாஸ்க் அணிவதும், கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தப்படுத்துவதுமே, கொரானாவிற்கு எதிராக தற்போது உள்ள ஒரே தீர்வாகும்.
இந்நிலையில், பொது இடங்களில் கொரோனா முன்னெச்சரிகையாக பெரிய அளவிலான கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் உள்ளே சென்று வெளியேரும் போது உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு மட்டுமின்றி சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று தெளிக்கப்படும் கிருமி நாசினியானது மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் எனவும், கடுமையான ரசாயனம் கலந்த கிருமி நாசினிக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி அசோக்பூஷன் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு, மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கடுமையான ரசாயனம் கொண்ட கிருமி நாசினிகளை நாடு முழுவதும் தடை செய்யலாமா என்பது குறித்து 30 நாட்களில் ஒரு விரிவான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், மனித உயிர்களை காக்கும் அடிப்படை உரிமை அரசுக்கு உள்ளது, எனவே மத்திய அரசு 29 நாட்கள் வரை காத்திருந்து விட்டு கடைசி நேரத்தில் காரணம் தெரிவிக்க வேண்டாம் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.




